சென்னை: மெரினா கடற்கரை சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் இருக்கக்கூடிய மணலில் இன்று(ஜன.31) காலை 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கட்டை மற்றும் கத்தியால் ஒரு வாலிபரை துரத்தி சென்று தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, தகவலறிந்த மெரினா போலீசார் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோதலில் காயமடைந்த மூன்று வாலிபர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த மோதல் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநில கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பி.ஏ எகனாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு பயிலக்கூடிய மாணவர்களான சூர்யபிரகாஷ், நவீன் மற்றும் சூர்யா ஆகிய மூவரை, அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாமாண்டு பயிலும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து கத்தி மற்றும் கட்டையால் துரத்திச் சென்று தாக்கி இருப்பதும் தெரியவந்தது.
மேலும், ரூட் தல பிரச்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மாணவர்கள் யார்? என்பது குறித்து மெரினா போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதுமே பரபரப்பாக இயங்கும் மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் ஆயுதங்களால் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ரூட் தல' மோதல் தொடர்பாக தொடர்ச்சியாக பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களால் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:குடும்பத்தகராறில் தந்தையின் பிறப்புறுப்பை வெட்டிய மகன்.. போலீசார் வலைவீச்சு!