நங்கநல்லூர் எஸ்பிஐ காலனி குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (52). தொழிலதிபரான இவர் சபரிமலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், 120 சவரன் நகை, பத்து சவரன் வைர நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து நங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் ரமேஷின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. பின்னர், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இதே கும்பல் தாம்பரத்தில் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும், கொள்ளை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அங்கு பதிவான தொலைபேசி எண்களின் சிக்னல்களை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் ரயில் மூலம் வட மாநிலத்துக்குச் செல்வது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் நகுடா ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தமிழ்நாடு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் ரயில் மூலம் தப்பித்த பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 10 பேரையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரை சென்னை கொண்டு வருவதற்காக தமிழ்நாடு தனிப்படை காவல் துறை மத்தியப் பிரதேசம் விரைந்துள்ளனர்.