சென்னை: வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால் மற்றும் யுத்திகள் தொடர்பான கருத்தரங்கில் மாணவர்களிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசும் போது, "இந்தியாவில் 1960,1980 மற்றும் 2020 என மூன்று முறை புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் முதல் புதிய கல்விக் கொள்கை என்பது இதுதான். முதல் இரண்டு கல்விக் கொள்கைகள் என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்வி குறித்தாக இருந்தன. அதனை மாற்றம் செய்வதாக மட்டுமே இருந்தன. தற்பொழுது வந்துள்ள கல்விக் கொள்கை என்பது புரட்சிகரமான ஒன்றாகும்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனப்பின்னரும் அதிகம் படிக்காத,வீடுகள் இல்லாத,ஏழைகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த காலகட்டத்தில் கல்லூரி, மருத்துவமனைகள் , நிறுவனங்கள் உருவாகி உள்ளன. ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. முன்னதாக இருந்த அமைப்பில் பல பிரச்சினைகள் இருந்தன, மக்கள் அரசு இடையிலான உறவு என்பது வாடிக்கையாளர் நிறுவனத்திற்கும் இடையிலான உறவு போல இருந்தது. அனைத்திற்கும் அரசை நோக்கி மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்தியா போன்ற மிகப் பெரிய நாடு தங்களுக்கான இடத்தை அடைய மாற்றங்கள் செய்ய வேண்டும். முந்தைய அரசு சென்ற பாதையில் சென்றால் அதனை அடைய முடியாது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும்,இந்த காலகட்டத்திற்குத் தேவையான கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு வருகிறது, இதனைத் துரத்திப் பிடிக்கும் இடத்தில் நாம் இருக்கக் கூடாது, நாம் பெரிய அளவில் முன்னேற வேண்டும். அதற்கு இன்றைய தேவையைப் புரிந்து அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும். இந்த புதிய கல்விக் கொள்கை என்பது IAS அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் உருவாக்கப்படவில்லை, ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் உள்ளனர், இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்புகளை யாரும் பார்க்கவில்லை. தனித் திறமை என்ன உள்ளது எனப் பார்க்கின்றனர். மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது, தமிழகத்தில் நிறைய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் தேசிய அளவில் கல்வியறிவு பெற்றவர்களை விட இரண்டு மடங்கு மாணவர்கள் தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளைப் பார்க்கும்போது நிறுவனத்தை விரிவாக்கம் செய்கிறார்களா? என நான் கேள்வி எழுப்பும் நேரத்தில் அவர்கள் வழங்கும் ஒரே பதில், மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் அளவிற்கு அவர்களிடம் திறன் இல்லை என்பதையே பதிலாகக் கூறுகின்றனர்.
இன்னும் சொல்லப் போனால் என்ஜினீயரிங் படித்த மாணவர்களில் 80-90 சதவீதம் மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலையில் உள்ளனர் என கூறுகின்றனர். 70 சதவீதம் மாணவர்கள் கலை படிப்புகளைப் படித்து வருகின்றனர் என்ற தகவல் பல்கலைக்கழக மானியக் குழு மூலம் கிடைத்துள்ளது.
70 சதவீதம் மாணவர்கள் கலை படிப்புகளை முடித்த பின் அவர்களுக்கு என்ன வேலை உள்ளது. வரலாறு படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை, ஆனால் 70 சதவீதம் மாணவர்கள் கலை சார்ந்த படிப்புகளைப் படிக்கின்றனர். வரலாறு சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் அறிவியல் சார்ந்த படிப்புகளைக் கூடுதலாகப் படிக்கும் ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
வரலாறு குறித்த பட்டப்படிப்பு என்றால் முழுக்க முழுக்க வரலாறு மட்டுமே படிக்க வேண்டும் என்ற முறை இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது, கூடுதலாக மாணவர்கள் பல துறைகள் குறித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் பட்டப்படிப்பு இருக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் வெறும் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன இன்று அது 1000 கடந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகின்றன அதற்குக் காரணம் இளைஞர்களை தற்போது நாம் நம்பத் துவங்கி உள்ளோம். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களை, அடக்காமல் எப்படி வளர்ச்சி அடைய முடியும். பெண்கள் கல்வி குறித்தும் பெண்கள் வளர்ச்சி குறித்தும் அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை வசதிகளை ஏற்படுத்தாமல் பேசி வந்தனர் இன்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்து செல்லும் பணியில் அவர்களும் தற்போது இணைந்துள்ளனர்" என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
இதையும் படிங்க: சென்னை - மும்பை விரைவு ரயிலில் தீ விபத்து!