பிகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி. இவர், 1974ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனது கல்லூரி படிப்பை முடித்த ரவி பின்னர், பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து, 1976ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து இந்தியக் காவல் பணி அலுவலராகத் தேர்வாகினார்.
பின்னர், 2012ஆம் ஆண்டு இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் தேசிய நாளிதழ்களில் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வந்தார்.
தொடர்ந்து 2014ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக ரவி நியமிக்கப்பட்டார். பின்னர், மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த சில நாள்களில், நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக பணியாற்றினார்.
இவரது கடும் முயற்சியின் காரணமாக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போராட்டக் குழுவிற்கும், இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது.
2018ஆம் ஆண்டு அக்.05 ஆம் தேதி துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
தற்போது, ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து ஆளுநர் பணியினை அசாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.