தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு சார்பாக 50 ஏக்கர் நிலமும் திரைப்பட படப்பிடிப்புத் தளம் கட்டுவதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது. தற்போது அந்தப் படப்பிடிப்புத் தளம் கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளன.
எனவே இதை திறந்துவைப்பதற்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வரவேண்டி அழைப்புவிடுக்க இப்போது வந்துள்ளோம்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள மூன்றாயிரம் நபர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கை குறித்து துணை முதலமைச்சர், அலுவலர்களிடம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக அடுத்த வாரத்திற்குள் நல்ல முடிவை அறிவிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.