2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் காவல் துறையினர் கைகோர்த்து செயல்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையின் போது, இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருப்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக நவம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.