சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியில் மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைகளை அகற்றாமல் அப்பகுதி சாலையின் இரு புறத்திலும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை நீர் தேக்கம்: கடந்த சில தினங்களாக தமிழகத்தில் லேசான முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக மழைநீர் குளம் போல் தேங்கிக் காட்சியளிக்கிறது.
சாலை முழுவதும் நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், சாலையின் அருகே பள்ளி, கோயில்கள் இருப்பதால் பள்ளி மாணவர்கள் அந்த சாலையைக் கடந்து செல்வது பெரும் சவலாக இருப்பதாகப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை!
சாலையின் இரு புறத்திலும் கடை இருப்பதாலும் கடையைத் திறக்க முடியாமல் கடை உரிமையாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்தி நிரந்தர தீர்வை காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய் தொற்று அபாயம்: பொழிச்சலூர் டா.ராதாகிருஷ்ணன் சாலையின் இரு புறமும் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. மழை பெய்து குப்பைகளில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே கடந்து செல்பவர்களுக்கு நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
குப்பைகளில் கால்நடைகள் உணவு உண்ண வருவதால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கின்றன எனவும் இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என மக்கள் கூறுகின்றனர். தமிழகம் முழுவதும் டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் குப்பைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் ஏடிஎஸ் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
அதனால் தேங்கிக் கிடக்கும் நீர் மற்றும் குப்பைகளால் பொழிச்சலூர் மக்களுக்கு டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் 10.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு! பாஷ்யம் நிறுவனம் மனு தள்ளுபடி! நீதிபதி கூறியது என்ன?