’பப்ஜி’ விளையாட்டை ஆபாசமாகப் பேசி யூ-ட்யூபில் ஒளிபரப்பு செய்துவந்தவர் மதன். தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் குறித்துத் தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டுவந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பின. குறிப்பாக மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் இரண்டு புகார்கள் வந்தன.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மதனை நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பினர். ஆனால் மதன் நேரில் முன்னிலையாகவில்லை. குறிப்பாக மதன் விபிஎன் சர்வரைப் பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பதால் காவல் துறையினர் மதனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பப்ஜி மதன் மீது மேலும் ஒரு புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினருக்கு வந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு சைபர் கிரைம், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இணைந்து மதனைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பப்ஜி மதனுக்கு எதிராக ஏராளமான ஆன்லைன் புகார்கள் வரத் தொடங்கியுள்ளது. இதுவரை 159 ஆன்லைன் புகார்கள் அவர் மீது வந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
பப்ஜி மதன் மீது தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆபாச பேச்சால் லட்சங்களை அள்ளிய மதன்... வெளிவருமா 18+ சேனலின் லீலைகள்?