சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஹிஜாவு நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது. பொதுமக்களுக்கு மாதம் 15 விழுக்காடு வட்டி தருவதாகக் கூறி பல முகவர்களை நியமித்து, நட்சத்திர ஹோட்டல்களில் பல கூட்டங்களை நடத்தி, கவர்ச்சி விளம்பரங்களை அறிவித்து, பல ஆயிரம் கோடிகளை குவித்தது விசாரணையில் தெரியவந்தது.
எந்த ஒரு முதலீட்டு திட்டமும் இல்லாமல் முதலாவதாக முதலீடு செய்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி மாத வட்டியாக கொடுத்துவிட்டு, அடுத்தபடியாக முதலீடு செய்தவர்களின் பணத்தையும் அவர்களுக்கு வட்டி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தப் புகார்களின் அடிப்படையில் 14ஆயிரத்து 126 முதலீட்டாளர்களிடம் ஆயிரத்து 46 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஹிஜாவு நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தி மூன்று லட்சத்து 34 ஆயிரம் பணம், 448 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி, எட்டு கார்கள், 14.47 கோடி வங்கி கணக்கு முடக்கம் மற்றும் 75.6 கோடி மதிப்புள்ளான அசையா சொத்துகள், 90 கோடி மதிப்புள்ள 54 அசையும் சொத்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 14 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய இயக்குநரான அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட 15 முக்கிய நபர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில், இவர்கள் பற்றிய துப்புக் கொடுக்கும் பொதுமக்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடம் பொதுமக்கள் பணம் முதலீடு செய்ய வேண்டாம் எனவும்; ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட நிதி நிறுவனங்களிடம் மட்டுமே பணம் முதலீடு செய்ய வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.8 ஆயிரம் திருடியதாக சந்தேகம்! கல்லூரி மாணவிகள் மீது வன்கொடுமை தாக்குதல்!