நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக படுதோல்வியடைந்து வாக்கு விழுக்காட்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அமமுகவில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், என்.ஜி.பார்த்திபன், ஜி.செந்தமிழன், ஜோதி முருகன் ஆகியோர் மக்களின் செல்வாக்கை இழந்தனர். தேர்தல் பரப்புரையின்போது அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் வெற்றியை நாட்டி அதிமுகவிற்கு பயத்தைக் காட்டுவோம் என்று சூளுரைத்தார். ஆனால், தற்போது படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பேச மறுப்பது ஏன்? என பலரும் பலவிதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சந்திப்பாக நேற்று தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பிற்கு பின்னர் வழக்கம் போல் அதிமுகவும், அமமுகவும் இணைய உள்ளது என்கிற பேச்சுகள் மீண்டும் அடிபட தொடங்கியுள்ளன. இதற்கு விளக்கம் அளித்த அமமுக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் 'அதிமுக -அமமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை. ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் எங்கள் தரப்பில் ஏதேனும் செய்ய முயன்றால் அது திமுகவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பதால், அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் இறங்கி மக்களை சந்திப்பதென கட்சி முடிவு செய்ய உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும்பட்சத்தில் திமுகவிற்கு சாதகமாக அதிமுக உறுப்பினர்கள் 10 பேர் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக அமமுகவினர் தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன. அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்பதுதான் அதிமுகவினருக்கு பீதியைக் கிளப்பியுள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் திமுகவினர் செந்தில் பாலாஜிக்கு வலை வீசியது போன்று செந்தில் பாலாஜியை வைத்து அதிமுகவில் உள்ள நம்பகத்தன்மையான ஐந்து எம்.எல்.ஏக்களுக்கு மு.க. ஸ்டாலின், வலை வீசி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவினரிடையே ராஜ்ய சபாவிற்கு யாரை அனுப்புவது என்ற குழப்பம் நீடித்து வருவதால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோடி பிரதமராக பதவியேற்றதும், திமுக சார்பில் மூன்று ராஜ்ய சபா எம்பிக்களை நிர்ணயம் செய்த பிறகு, அதிமுக ஆட்சி கவிழ அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமமுக கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக அமமுகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுகுறித்து அமமுக தெரிவித்துள்ள விளக்கம் பின்வருமாறு
அமமுக போட்டியிட்ட 558 பூத்களில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. ஒவ்வொரு பூத்திலும் நான்கு ஏஜெண்ட்கள் அமமுகவிற்காக பணியாற்றி உள்ளனர். ஆனால், அவர்களது வாக்குகளும் இல்லை என்கிறார்கள். இந்த தேர்தல் மோடியின் வெற்றி என்று சொல்வதைவிட இயந்திரங்களின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 2018 டிசம்பரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 303 சீட்கள் வெல்வோம் என்றார். அது சரியாக நடந்தது எப்படி என்றும் சந்தேகத்தை கிளப்பும் அமமுகவினர், மோடியை எதிர்த்த ஐவர் முற்றிலுமாக வாஷ் அவுட் ஆக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் குறிவைத்து வாஷ் அவுட் ஆகியுள்ளதால் எங்களது சந்தேகம் வலுவடைகிறது. வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று அமமுக தரப்பினர் கூறுகின்றனர். மேலும், விரைவில் மோடிக்கு பாடம் புகட்டுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.