வேலூர் மாவட்டம் அணைக்கட்டுவை சேர்ந்த மாணவி லோகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தான் கலந்துகொண்டேன். இந்த தேர்வில் மாதிரி விடை தாளில் 720 மதிபெண்களுக்கு 520 மதிப்பெண்கள் சரியாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு நான் 19 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளதாக முடிவு வெளியானது.
இந்த முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. என்னுடைய விடைதாள்களை மறு மதிப்பீடு செய்யக்கோரி தேசிய தேர்வு முகமைக்கு மனு அளித்தேன். ஆனால் எனது மனு தொடர்பாக தேசிய தேர்வு முகமை எந்த முடிவுகளும் அறிவிக்கவில்லை. எனவே எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், விடைத்தாளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.