சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும். அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்து தற்போது வரை காலியாக உள்ளது.
இதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்த குழு அறிக்கையையும் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் 2 முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்றது.
இதில் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரை தேர்வு செய்து பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகீல் அக்தர் கடந்த நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் 1962 ஆம் ஆண்டு பிறந்தவர்.
முதுநிலை இயற்பியல் படித்தவரான இவர் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கியவர். ஷகீல் அக்தர் திமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
மேலும் ஓய்வு பெறும் போது சிபிசிஐடி டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தலைமை தகவல் ஆணையர் தேர்வுக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் சேர்த்து 4 தகவல் ஆணையர்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்னர் பரிந்துரை செய்து அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்து, அதற்கான ஒப்புதலை, ஆளுநர் மாளிகை தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் யார் என்பதையும், தகவல் ஆணையர்களின் தேர்வு குறித்தும் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக காலியாக இருக்கும் இந்த பதவிக்கு தலைமை செயலாளர் இறையன்பு பெயரும் இந்த பட்டியலில் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.