கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் நிக்கல்சன். இவர் தமிழக காவல்துறையில் 1979 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் இணைந்தார். பின்னர் 1987ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு தூத்துக்குடி, சேலம் மாவட்ட எஸ்பியாகவும், மாநில போதை பொருள் நுண்ணறிவு பிரிவி எஸ்.பியாகவும் பணியாற்றினார்.
திண்டுக்கல் சரகம், சிபிசிஐடி பிரிவு ஆகியவற்றில் டி.ஐ.ஜியாக பணியாற்றி கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் ஓய்வு பெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் தனக்கு ஐ.ஜியாக பதவி வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு வாள் சண்டை சங்க தலைவராகவும் செயலாற்றினார்.
பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு "நமக்கு நாமே திட்டம்" நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கினார். ஆனால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போதும் ஜான் நிக்கல்சன் திமுகவிற்காக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் ஒய்வு பெற்ற டிஐஜி ஜான் நிக்கல்சனுக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். கடந்த 26ஆம் தேதி ஜான் நிக்கல்சனின் உடல் நிலை மோசமடைந்ததால், கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (மே 1) சிகிச்சை பலனின்றி ஜான் நிக்கல்சன் உயிரிழந்தார்.
இதையும் படிங்க : IPL 2021 பாட்ஷா vs மாணிக்கம்; ஐபிஎல் ராஜாங்கத்தின் மன்னன் யார்?