சென்னை: தமிழ்நாட்டின் 29 ஆவது டிஜிபியாக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜே.கே. திரிபாதி, 2 ஆண்டு பதவிக்காலத்தை சிறப்பாக முடித்து இன்றுடன் ஓய்வு பெற்றார்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுக் குழுவினரின் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்புக் காவல் படையினர், சிறப்பு கமாண்டோ படையினர், கடலோரப் காவல்படையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர், நீலகிரி மாவட்ட காவல் குழுவினர், ஆயுதப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி ஏற்றுக்கொண்டார்.
தனித்திறமை படைத்த திரிபாதி
பின்னர் மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி பணியின் போது தனித்திறமை படைத்தவராகவும், சிறந்த பண்புகளை கொண்டவராகவும் திகழ்ந்து வந்துள்ளார். துணை ஆணையர், ஆணையர் என எந்தப்பதவி வகித்தாலும் தனது கடமையை சிறப்பாக ஆற்ற மிகவும் கடுமையாக உழைத்தவர். அவருக்கு மகிழ்ச்சியான ஓய்வுகாலம் அமைய மனமாற வாழ்த்துகிறேன்" என்றார்.
தமிழ்நாடு என் தாய்வீடு
இதனைத்தொடர்ந்து பேசிய ஜே.கே திரிபாதி, " எனது காவல்துறை பணி 1985ஆம் ஆண்டு தொடங்கியது . 36 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றி இன்று ஓய்வு பெறுகிறேன். எனக்கு இந்த பெருமையை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் அனைத்து காவல்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு தமிழ்நாடே தாய் வீடு. பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழ்நாட்டில் தங்கி என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்" என்று உருக்கமாகப் பேசினார்.
பிரிவு உபசார விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபிக்கள் கரண் சின்ஹா, ஷக்கீல் அக்தர், அமல்ராஜ், தாமரைக் கண்ணன், கந்தசாமி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள், ஐபிஎஸ் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: செயல் வீரர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்