இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி, பலர் வாகனங்களிலும், தெருக்களிலும் சுற்றித் திரிகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். காவல் துறையினர் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கரோனா பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து அழைத்து வரும் பணியிலும், கரோனா தாக்கிய நபரின் தெரு முழுவதையும் சீலிட்டு அப்பகுதியினரை வெளியே செல்லவிடாமல் அங்கு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நபர், தப்பித்துச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வார்டுக்கு வெளியே பாதுகாப்புப் பணியிலும், சட்டம் ஒழுங்கு பணிகளையும் கவனித்து வருகின்றனர். இதனால், காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பணி நேரத்தை விட கூடுதலாக காவலர்கள் பணி செய்து வருகின்றனர். ஏற்கெனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள காவலர்கள் அனைவரும் மே-3ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கரோனா நோய்த் தடுப்புப் பணியில், தமிழ்நாடு காவலர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலித்த தமிழ்நாடு காவல் துறை, அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் தற்போது, பணியில் சேர விரும்பும் ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் 40 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் 201 பேர் குணமடைந்தனர்!