கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள கடல் பகுதியில் விதிகளை மீறி மீனவர்கள் சிலர் 240 குதிரை திறன் கொண்ட மோட்டார் படகுகளை கொண்டு மீன் பிடிக்கின்றனர்.
இதற்கு தடை விதிக்கக்கோரி தேவனாம்பட்டினம் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் அறிவழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விதிகளை மீறி சுமார் 150க்கும் மேற்பட்ட மீனவர்வர்கள் 240 குதிரை திறன் கொண்ட மோட்டார் படகுகள் கொண்டு மீன் பிடிப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மீனவர்களின் இந்த விதிமீறல் குறித்து மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மூன்று முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் கொடுத்த புகார் மனு குறித்து 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என மீன்வளத்துறை இயக்குனர், கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஜாகுவார் தங்கம் தொடுத்த வழக்கில் சாதகமான தீர்ப்பு