சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுகவை நிர்வாகி தேவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அதிமுக அரசால் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக 2ஆயிரத்து500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும், நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கரோனா நிவாரண நிதியாக 2ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலைக் கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்கத் தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நிவாரண உதவியை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு பையை வீடு வீடாகச் சென்று வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோரது அமர்வில், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.