பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஜூன் மாதம் 9ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடும் போது மாணாக்கர்களின் மதிப்பெண்களை வெளியிடக்கூடாது. வெறுமனே அவர் தேர்ச்சி பெற்றாரா இல்லையா என்பதை மட்டுமே வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னையை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட்.19) விசாரணைக்கு வந்தபோது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் முனுசாமி ஆகஸ்ட் 10ஆம் தேதியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு விட்டது.
காலாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 சதவிகிதமும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 சதவிகிதமும் வருகைப் பதிவில் அடிப்படையில் 20 சதவிகிதம் என மதிப்பெண் கணக்கிடப்படும் தெரிவித்தார். ஏற்கனவே உரிய நெறிமுறைகளின்படி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.