சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத, மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். யோகாவின் மூலம் அனைவரும் உடல், மன ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கல்வி கற்பதற்கு யோகா உதவுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 13 ஆயிரம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி பாடப்புத்தகங்களில் தேசியகீதத்தில் உள்ள தவறினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியினை இரண்டே ஆண்டில் முடித்துள்ளோம்.
இதனால் சிறிய பிழைகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என உள்ளது குறித்து கேட்டதற்கு, தமிழ்நாட்டில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.