சென்னை: மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின், “மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
உழவர்கள் நம் நாட்டில் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நெற்றி வேர்வை சிந்தி நாம் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும்.
தன்னிச்சையாகச் செயல்பட்ட மத்திய அரசு
எந்த மாநிலத்துடனும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் கொண்டுவந்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது. நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், உழவர் நலனுக்கும் உகந்ததாக இல்லாத சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானத்தில் ஒருமனதாக என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதை அதிமுக விளக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நலன் காக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது என்று கூறும் நிலையில் அதிமுக ஆட்சியில் இருக்கும்பொழுது ஏன் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை. நீங்கள் செய்யாததை தற்போது நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்
வேளாண் மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராடிய உழவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும். ஆட்சிக்கு வந்தபின் பிரதமரை நாங்கள் நேரில் சந்தித்து இது குறித்துப் பேசினோம். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு வரவில்லை.