சென்னை: வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். பின்னர், இது குறித்து அவர் பேசுகையில், "உழவர்களைப் போற்றும் இந்த அரசு, அவர்களின் வாழ்வையும் போற்றும்.
உழவர்களைப் பாதுகாக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்துசெய்யப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் இந்தத் தீர்மானத்தை மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்தத் தீர்மானத்தின் மீது அதிமுக, பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், தனது நிலைமை துரைமுருகனுக்குத் தெரியும் எனப் பேசியதோடு, பாட்டுப் பாடி தனது நிலையை விளக்கினார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது.