சென்னை அயனாவரம் சோலைத் தெருவில் அமைந்திருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வரும் நோபல் மங்கல் குமார் அவரது மனைவி மெர்லின் ஆகிய இருவரும் அக்குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதே போல் கார் பார்க்கிங், குடியிருப்பு பராமரிப்பு போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் அவர்கள் சொல்வதை தான் குடியிருப்பில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அங்கு வசிப்பவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒருவேளை அவர்கள் சொல்வதை கேட்கவில்லையெனில் தங்களிடம் உள்ள துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
நோபல் மங்கல் குமார் தனது காற்றழுத்த துப்பாக்கியால்(ஏர் கன்) மேல் தளத்தில் உள்ள சுவற்றை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முத்துக்குமரன் என்பவர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அயனாவரம் காவல் துறை ஐபிசி 294 பி - ஆபாசமாக பேசுதல், ஐபிசி506 (2)- கொலை மிரட்டல் விடுத்தல், ஆயுத சட்டப்பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடமாடும் தடயவியல் துறை உதவி ஆணையர் சோபியா ஜோசப் சுடப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள நோபல் மங்கல் குமார், அவரது மனைவி மெர்லின் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தப்பியோடிய தம்பதியை பிடித்தால் தான் என்ன காரணத்திற்காக சுடப்பட்டது, அவர் வைத்திருந்த துபாக்கி என்ன வகையானது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
இதையும் படிங்க:’துப்பாக்கி கலாச்சாரத்தை திமுக கையிலெடுத்துள்ளது’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்