கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகளுடன் மே மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாநிலத்துக்குள் பேருந்து இயக்கவும்,மாநிலங்களுக்கு இடையே பேருந்து இயக்குவது குறித்தும் அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பேருந்து, ரயில், விமான போக்குவரத்து மீதான தடை தொடரும் என அறிவித்திருந்தாலும், வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள 25 மாவட்டங்களில் 20 நபர்களுடன் பேருந்து இயக்கலாம் என தெரிவித்திருந்தது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை என்றபோதிலும் அத்தியாவசிய பணியாளர்கள், 50 விழுக்காடு அரசு பணியாளர்களுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நீண்ட நாள்களாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஜூன் 31 ஆம் தேதிக்கு பின் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாக நிலையில், ஜூன் 7 ஆம் தேதி முதல் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுகான முன் பதிவு வசதி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பேருந்துகளில் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து இருக்கைகள் அமைக்க வேண்டியுள்ளது. இது குறித்து அரசு எந்தவித விதிமுறைகளையும் வெளியிடாத சூழ்நிலையில் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின கூறுகையில், "ஒவ்வொரு முறை ஊரடங்கு தேதி அறிவிக்கப்படும்போதும் இணையதளத்தில் முன் பதிவு தொடங்குகிறது, பின் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும்போது அது ரத்து செய்யப்படுகிறது" என தெரிவித்திருந்தனர். தற்போது முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் சாதாரண கட்டணம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் இதில் முன் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் வழிபட அனுமதிக்க வேண்டும்'