சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால், பல்வேறு குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் மழை நீர் சூழப்பட்டப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை, தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர்.
மழை நின்று இரண்டு நாள்களாகியும், சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் மேற்கு தாம்பரம், ராதா நகர்ப் பகுதியில் குடியிருப்பைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் மின்சாரம் இல்லாமலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் இரண்டு நாள்களாக தவித்துக்கொண்டிருந்த குடும்பத்தை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.