சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மிக முக்கிய பகுதிகளில் தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், வசந்தம் நகர், அமுதம் நகர், சிடிஓ காலனி, அஞ்சுகம் நகர், கோகுலம் நகர் உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.
இந்த பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழை மற்றும் அடையாறு ஆற்றின் வெள்ள நீரால் இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களின் வீடுகளின் தரைத்தளமும் வெள்ள நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் வசித்து வருபவர்கள் அனைவரும் வீட்டின் முதல் தளத்திலும், மொட்டை மாடிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக இரவு முழுவதும் தஞ்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளநீர் சூழ்ந்ததால், வீடுகளில் உள்ள உடைமைகளைக் கொண்டு செல்ல முடியவில்லை எனவும், அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கி சேதம் அடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கூறுகையில், "நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் மீட்புப் படையினர் யாரும் எங்கள் பகுதிக்கு வரவில்லை.
மீட்பு பணிகளில் ஈடுபடவில்லை. மழை நின்றவுடன், இன்று காலை முதல் பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத் துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து படகு மூலம் அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக சுமார் 10 அடி உயரம் வரை மழை நீர் சூழ்ந்ததால், வீட்டின் மாடியில் இருப்பவர்களை மீட்பு படையினர் மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
வீட்டில் பால்கனி உள்ளவர்களை கயிறு மூலமாக கீழே இறக்கி படகுகளில் மீட்கப்பட்டு வருகின்றனர். வெறும் படிக்கட்டுகள் மட்டும் இருக்கும் வீடுகளில் மழைநீர் முழுவதும் சூழ்ந்துள்ளதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் வீட்டின் முதல் தளங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்ததால் உணவு, பால் எதுவும் கிடைக்காமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மீட்புப் படையினர் விரைந்து பாதிப்புக்குள்ளான மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு தாம்பரம் பகுதிகளில் மீட்புக் குழுவினர் மற்றும் படகுகள் குறைவாக இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, கூடுதலான படகுகளுடன் மீட்புப் படையினர் வர வேண்டும் என பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், பாதிப்புக்குள்ளான பகுதிகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Koovam River: கரை புரண்டு ஓடும் தண்ணீர்..! கூவத்தைச் சுத்தம் செய்த மழை நீர்..!