இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரிலிருந்து தோகா வழியாக கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று (ஜூன் 4) இரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் 10 பெண்கள் உள்பட 170 இந்தியா்கள் அழைத்து வரப்பட்டனா்.
இவா்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவா்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் நகருக்கு புனித பயணமாக 3 மாதங்களுக்கு முன்பு சென்றவா்கள். கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்தாகிவிட்டதால், இந்தியா திரும்பி வர முடியாமல் சிக்கித் தவித்தனா். அவா்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்துவர குடும்பத்தினா் மற்றும் பல்வேறு அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.
அதன்பேரில் அங்குள்ள இந்திய தூதரக அலுவலர்கள் இத்தாலி அரசுடன் பேசி ஏற்பாடுகள் செய்தனா். அதன்பேரில் அவா்கள் அனைவரும் ரோமிலிருந்து தனி விமானத்தில் தோகா வழியாக நேற்று( ஜூன் 4) சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனா்.
அங்கு அவா்களை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்று தகுந்த இடைவெளி விட்டு வரிசைப்படுத்தி அனைவருக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன. அதன்பின், அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக 7 தனி பேருந்துகள் மூலம் தேனாம்பேட்டையில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே, சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 150 இந்தியா்கள் மீட்கப்பட்டு தனி விமானத்தில் நேற்று (ஜூன் 4) இரவு 10.30 மணிக்கு ரியாத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்கள் அனைவரையும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்று அனைவருக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன. பின்பு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக கிண்டி, மணப்பாக்கம், மேலக்கோட்டையூர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதையும் படிங்க: 'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா