சென்னை: பெண் காவலர்களுக்கு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆனந்தம் பயிற்சி விழாவினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். சென்னை காவல்துறையின் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர் முதல் பெண் ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் காவல் பணியிலும், வாழ்க்கையிலும் திறம்படச் செயல்படுவதற்காக ஆனந்தம் என்கிற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி முகாமில் தன்னம்பிக்கை எப்படி வளர்த்துக் கொள்வது, சுயமரியாதையுடன் இருப்பது, உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது, பணிச்சுமைகளைக் கடந்து செல்வது உள்ளிட்டவை பற்றி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 2216 பெண் காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையிலும், இரண்டாவது கட்டமாக ஆனந்தம் துவக்க விழாவினை துவங்குவதற்காகச் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆனந்தம் பயிற்சி முகாமினை இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி 100 சதவீதம் சரியாக வழிநடத்தி வருகிறார். காவலர்கள் அவர்களது பிறந்தநாளின் போது புகைப்படம் எடுக்க வரும் போது, சம்பளத்தை என்ன செய்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால் பலர் கடனை அடைப்பதாகவும், ஒரு சிலரிடம் இருந்து பதில் வராது எனவும் குறிப்பிட்டார்.
இதனால் குறைவான சம்பளத்தை வைத்து எப்படிச் சேமித்து வைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆனந்தத்தில் சேர்க்க வேண்டும் என அவர் கூறினார். குறிப்பாகத் திருமணம் ஆகாத பிற மாவட்ட பெண் காவலர்கள் பலர் சென்னையில் வீடு எடுத்துத் தங்கி வருவதால், வீட்டு வாடகை பிரச்சனையை ஒழிப்பதற்காக இந்தாண்டு பெண்கள் தினத்தன்று முதலமைச்சரிடம் பெண் காவலர்களுக்கான விடுதி தரக்கோரி விண்ணப்பம் அளிக்க இருப்பதாக அவர் கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளில் பெண் காவலர்கள் திறம்படச் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான பயிற்சியாளர்கள் முறையாக இல்லை. மாநில அளவில் மட்டும் தான் பயிற்சியாளர்கள் திறம்படச் செயல்படுகிறார்கள். தேசிய அளவில் பயிற்சியாளர்கள் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மேடையில் பேசுகையில், இரண்டு நிமிடம் பேசினாலும் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பேசி விட்டு சென்ற காவல் ஆணையரின் பேச்சு ரசிக்க வைத்ததாகவும், தலைமை என்றால் இதுதான் தலைமை எங்களைப் போல் வள வள என்று பேசாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசிவிட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தில் பாதி சுமையைக் கணவர்களும் சுமந்தால் மட்டுமே வாழ்க்கை சுமூகமாக செல்லும் எனவும், இதனால் ஆனந்தம் நிகழ்ச்சியில் கணவன்மார்களும் நிச்சயம் பங்கு பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சினிமாவில் பெண் ஒருவரை வடிவேலு கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா என பாடல் பாடி வம்பிழுக்கும் போது, நடனமாடிக் கொண்டே பெண் காவலர்கள் வடிவேலுவைக் கைது செய்து கொண்டு செல்லும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பெண் காவலர்கள் இது போன்ற பல இன்னல்களைச் சந்திப்பார்கள் அவர்களால் காமெடி காட்சி போல செய்ய முடியாது என அவர் கூறினார்.
எட்டு மணி நேரம் அலுவலகத்தில் ஏசியில் அமர்ந்து பணியாற்றும் நபர்கள் தங்கள் துயரங்கள் பற்றி புலம்பும் நேரத்தில், 18 மணி நேரம் காவலர்கள் நின்று பணியாற்றுகிறார்கள் அவர்களுடைய துயரங்கள் மற்ற யாருக்கும் தெரிவதில்லை என கூறினார்.
இதையும் படிங்க: சென்னை காவல்துறையின் சைக்கிள் ராணி.. 23 வருடமாக சைக்கிள் ஓட்டும் பெண் போலீஸ்