இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி. பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாள்களில் சத்துணவுக்கு உரிய அரிசி மற்றும் பருப்பு வகைகளை உணவுப் பொருள்களாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலோட்டமாக இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வரவேற்கக்கூடியதாக தான் தோன்றும். ஆனால், நடைமுறையில் இந்த யோசனை தவிர்க்கப்பட வேண்டியதாகும். அங்கன்வாடி குழந்தைகள் முதல், உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் சமைத்த சூடான சத்துணவு, அதற்குரிய முட்டையும் வழங்குவதுதான் சரியானது, சிறந்தது. இதனை நடைமுறைப்படுத்த சிரமங்கள் தோன்றலாம், அரசு நினைத்தால் முடியும் என்பதே உண்மை.
தற்போது, கரோனா நோயைக் கண்டு பதற்றம், பயம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், அனைத்து பணிகளிலும் முடக்கம், சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவும் மார்ச் 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மாற்று வழி மூலம் சத்துணவு வழங்கியிருக்க வேண்டும், தவறிவிட்டது. சுமார் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவின்றி பரிதவிக்கின்றனர். நோய்த்தொற்று பரவாமலிருக்க ஊட்டச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம் என்பது இன்றுள்ள சூழலில் தேவை.
ஊட்டச்சத்து பாதிப்போடு கூடிய ஒரு தலைமுறையையே உருவாக்குவதற்கு இது இட்டுச் செல்லும். எனவே அருகிலுள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 10 மாநிலங்களில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே சத்துணவிற்கு பெயர் பெற்றதும், அரசுக்கு நற்பெயர் பெற்று கொடுத்த தமிழ்நாட்டிலும் இப்போதும் சூடான, சமைத்த உணவு வழங்குவது சாத்தியமானது தான். சத்துணவு சமைக்க அரசு தற்போது வழங்க உத்தேசித்துள்ள இந்த உரிய உணவீட்டு அளவு கொண்டு அந்தக் குடும்பத்தில் அந்தக் குழந்தைக்கு சத்துணவு, முட்டை ஆகியவை தினமும் வழங்க முடியாது உத்தரவாதமும் இல்லை.
எனவே, சத்துணவுக்குரிய உணவுப் பொருள்களை தராமல், அந்தந்த ஊரில் பள்ளிகள் மூலம் அந்த ஊரில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சமைத்த சூடான சத்துணவு தினமும் வழங்கிட வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் கையுறை, கிருமி நாசினி தெளிப்பு போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து சத்துணவு வழங்கிட அரசு உறுதிப்படுத்தவேண்டும். இதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி