தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. போதியத் தடுப்பு மருந்துகள் இன்னமும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சென்றடையாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனைத் தருவதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை பிளாஸ்மா சிகிச்சைக்காக, பிளாஸ்மா தானம் செய்ய கரோனா நோய்த் தொற்றால் குணமடைந்தவர்கள் முன்வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை மூலம் எளிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களைக் குணப்படுத்த முடியும் என்பதால், பிளாஸ்மா தானம் வழங்குவோர் மிக முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தவும் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வருபவர்களுக்கு, அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் முன் உரிமை வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டிலும் பிளாஸ்மா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வருபவர்களுக்கு, ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்பட்டால் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் கொடுக்க எளிதாக முன்வருவார்கள் எனக் கூறப்படுகிறது.
தற்போது வரை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், பிளாஸ்மா சிகிச்சை மூலம் 20க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர். ரவீந்திரநாத் கூறுகையில், "தமிழ்நாட்டில் பிளாஸ்மா தானம் கொடுப்பது குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. பிளாஸ்மா தானம் பெறுவதில் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் கொடுப்பவர்களுக்கு அரசு கெஸ்ட் கவுன்சில் சலுகைகள் கொடுப்பது, ரயில் போக்குவரத்தின்போது கட்டண சலுகைகள் வழங்குவது, அரசு பேருந்துகளில் இலவச பாஸ் கொடுப்பது போன்ற சலுகைகளை அரசு அறிவிக்கலாம்" என்றார்.
மேலும், தமிழ்நாடு முழுமையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கு, ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள், பிளாஸ்மா சிகிச்சை வழங்க ஆங்காங்கே தனித் தனியாக பிளாஸ்மா வங்கிகளை அரசு உருவாக்கலாம் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
தற்போதைய நிலையில் சென்னையில் பிளாஸ்மா தானம் பெறுவதற்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே எடுக்கப்படுகிறது என்பதால், தனியாக பிளாஸ்மா வங்கிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளரும் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலருமான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "பிளாஸ்மா தானம் தொடர்பாக முடிவுகள் எடுக்க அனைத்து அதிகாரங்களும் மருத்துவமனை டீன்களுக்கு வழங்கப்படுள்ளன. இது தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்" என்றார்.
இதையும் படிங்க... கோவிட் -19 சிகிச்சைக்காக பிளாஸ்மா வங்கி அமைக்கும் பஞ்சாப்!