சென்னை : தமிழ்நாட்டில் பல்வேறு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், தற்போதுதான் கரோனா தொற்று பரவலின் விகிதம் ஓரளவு குறைந்துள்ளது. இதே நிலையே மீண்டும் தொடரும் எண்ணத்தில், அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் கரோனா பரவல் காரணமாக வேலைக்கு வரவேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால் 55 வயதுடைய பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தற்போது 45 வயது உடையவர்களும் பணிக்கு வர வேண்டாம் என பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்கள் அறிவுறுத்துவதாக தகவல்கள் வெளிவருகின்றன. திருச்சி மாவட்டம் செங்காட்டுப்படி கிராம பஞ்சாயத்திலும் 45 வயதை எட்டிய பெண்களுக்கு பணிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையை தவிர மீதமிருக்கும் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரவுகளின்படி 90.38 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து, வேலைக்கான அடையாள அட்டையை வைத்துள்ளனர். தினந்தோறும் சராசரியாக 88.62 லட்சம் பேர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 45 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோரே ஆகும். கரோனா கால கட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாயே குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருந்தது என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால், தற்போது இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளதால், பொருளாதாரா ரீதியாக பாதிப்படைந்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பணி செய்ய விடாமல் தடுப்பதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, பலர் நமது செய்தியாளர்களிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றை கீழே காண்போம்.
கோமதி, துறையூர்: எனக்கு வயது ஐம்பது. எனது கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ஊழியர்கள் என்னை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தற்போது அரசு அறிவித்துள்ளதன்படி என்னுடைய வயதுக்கு வேலை கிடையாது என கூறுகின்றனர்.
அயிலை சிவசூரியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர்: தமிழ்நாடு அரசு 55 வயதுக்கு மேற்பட்டவர்களை உடனடியாக இத்திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது.
சில கிராம பஞ்சாயத்துகளில் 45 வயதுடையவர்களையும், வேலைக்கு வரக்கூடாது என ஊராட்சி தலைவர்கள் மிரட்டுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது மிகப்பெரிய தவறாகும்.
என். வீரசேகரன் (விவசாய சங்க தலைவர்), திருச்சி: கரோனா தொற்று படிப்படிப்பாயாக குறைந்துள்ளதால், இத்திட்டத்தின் கீழ் அனைத்து வயது வரம்பினரையும் வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தால்தான் பெரும்பாலான குடும்பங்களின் பொருளாதார சுமை குறைகிறது.
அதுவும் 40 முதல் 60 வயது வரை உள்ள பணியாளர்கள் வேலை செய்வதால்தான் நடுத்தர குடும்பங்கள் பொருளாதார பிரச்சினையை சமாளிக்க முடிகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்த வயது வரம்புக்கு கீழ் இருப்பவர்களையும் பணி செய்ய மறுப்பது குறித்து குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உயர் அலுவலர்கள் பேசுகையில் "அனைத்து வயதினரையும் பணி செய்ய வேண்டும் எனும் இந்த கோரிக்கை, அனைத்து தரப்பிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் இந்த கோரிக்கையானது மத்திய அரசு வரை சென்றுள்ளது. இதில் மத்திய அரசின் பரிந்துரையின்படி, மாநில அரசு விரைவில் நல்ல முடிவெடுக்கும். இத்திட்டத்தின் கீழ் 45 வயதுடையவர்களை வேலைக்கு சேர்க்காவிட்டால் கிராம ஊராட்சி ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
அரசு திட்டங்களில் நடுத்தர, ஏழை மக்களின் கைகளில் நேரடியாக பணம் புழங்க வழிவகுப்பது மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமே ஆகும். பணப்புழக்கம் குறைந்தால், பணவீக்கம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏற்கனவே கரோனாவால் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை, இந்த அறிவிப்பு மேலும் அதளபாதாளத்திற்கு தள்ளும். ஆகையால், இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய அரசு அறிவித்துள்ள வயது வரம்பை தளர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் கோயில்கள் திறப்பா? - கூடுதல் தளர்வுகள் என்னென்ன? - முதலமைச்சர் ஆலோசனை