சென்னை: தமிழ்நாடில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மட்டும், தேர்தல் நடைபெறும் இரு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.29) நடைபெற்றது.
பள்ளிகள் திறக்க அனுமதி?
அப்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மன அழுத்தம், கற்றல் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நிலையான கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இதே போன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - அனுமதியளித்தார் முதலமைச்சர்