நாட்டின் 72ஆவது குடியரசு தினவிழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாநில அரசும் செய்துவருகின்றன. சென்னையில் குடியரசு தினத்திற்கு முன்பு மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதுவழக்கம்.
அதன்படி இன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் தேசிய மாணவர் படை, மத்திய தொழிலகப் படை ஆர்பிஎஃப், தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்பு படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகைகளும் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதற்கு அடுத்தபடியாக 22ஆம் தேதி இரண்டாம் ஒத்திகை நிகழ்ச்சியும், 24ஆம் தேதி மூன்றாம் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடியரசு தின விழாவிற்கு தயாராகும் டெல்லி