சென்னை : முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநருமான இரா. நாகசாமி (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று(ஜன.23) காலமானார்.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிறந்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். பல தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ள இரா.நாகசாமி, சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்த ஆய்வுப்பணிக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார்.
இவரின் பணியை பாராட்டி இவருக்கு 2018ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. தொல்லியல் படிப்பை படித்த இவர் 1963 முதல் 1966ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலராகவும் 1966 முதல் 1988 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்துள்ளார்.
கல்வெட்டு, கலை, இசை, நாட்டியம், தமிழ் வரலாறு உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.