சென்னை: திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 2019ஆம் ஆண்டு பழைய திருப்பூர் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை சீரமைக்க ரூ. 36.5 கோடியை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார். அதன்படி பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், புதிய பேருந்து நிலையத்திற்கு "கொடி காத்த குமரன்" பெயர் சூட்டப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த பேருந்து நிலையத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக தயராக உள்ளது. இந்த நிலையில், அந்த பேருந்து நிலையத்திற்கு "கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்" என மாற்ற தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக, ஆகஸ்ட் 30ஆம் தேதி கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, எனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
கருணாநிதி பெயரை சூட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.கொடி காத்த குமரனின் பெயரை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, திருப்பூர் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றி, அதை தமிழ்நாடு அரசிற்கு அனுப்பினர். அதற்கு அரசும் ஒப்புதல் வழங்கியது. இது அரசின் கொள்கை முடிவு என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சிறார் வழக்குகளுக்கு விதிமுறைகள் - சென்னை உயர் நீதிமன்றம்