சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ராஜ அண்ணாமலைபுரம், பசுமைவழிச்சாலை, தெற்கு கேசவபுரத்தைச்சேர்ந்த வினோத்குமார் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மண்டலம் 13இல் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட தெற்கு கேசவ பெருமாள்புரம் பிரதான சாலை மற்றும் பசுமைவழிச்சாலை, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், கடைகள் ஆக்கிரப்புகளை அகற்றுவது குறித்து புகார் மனு அளித்திருந்தார்.
மேலும் தெற்கு கேசவப் பெருமாள்புரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச்சொந்தமான 18 கிரவுண்ட் காலிமனை உள்ளது. அந்த இடத்தில் வாகனப்பாதுகாப்பு நிறுத்தம் அமைத்து செயல்படுவதினால் கோயிலுக்கு வருமானம் வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டு மனுகளை விசாரணை செய்த ஆணையர் முத்துராஜ் அளித்துள்ள உத்தரவில், ’தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைப் பகுதியில் அமைச்சர்களை சந்திக்க வருபவர்கள் மற்றும் கபாலீஸ்வரர் கோயிலுக்குச்சொந்தமான திருமண மண்டபத்திற்கு வருபவர்களின் வாகனங்கள் கிரீன்வேஸ்சாலையில் நிறுத்துவதற்கு காவல் துறையால் அனுமதி அளிக்கப்படாததால், அதனை ஒட்டிய தெற்கு கேசவபெருமாள்புரம் சாலையில் எப்பொழுதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கைப் பாதிக்கிறது.
கபாலீஸ்வரர் கோயிலுக்குச்சொந்தமான 18 கிரவுண்ட் நிலம் தற்சமயம் பயன்பாடு இல்லாமல் வாட்ச்மேன் போடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மாநகராட்சிக்குச்சொந்தமான பொது இடங்களில் கட்டண வாகன நிறுத்தங்கள் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
அதேபோல் திருக்கோயில் நிர்வாகமும் தற்சமயம் பயன்படாமல் உள்ள இடத்தினை மாற்று பயன்பாட்டிற்கு வரும் வரையில் தற்காலிகமாக கட்டண வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றினால், அமைச்சர்களைச் சந்திக்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகின்ற வாகனங்கள் மற்றும் கோயிலுக்குச்சொந்தமான திருமண மண்டபத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கான கட்டண வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், வாகனம் நிறுத்துவது சம்பந்தமான பிரச்னை முடிவுக்கு வரும்.
மேலும் முக்கியப் பிரமுகர்களின் வசிப்பிடமாக உள்ள சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் அதன் அருகில் உள்ள தெற்கு கேசவ பெருமாள்புரம் பிரதான மற்றும் சாலைகளில் பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் வானங்களால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி மற்றும் பாதுகாப்பு பிரச்னை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதியில் சாலைப்பகுதியில் பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாக அகற்றுவது குறித்து மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 13 செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "ஆளுநர் ஆளுநராக செயல்படுவது நல்லது" - திருநாவுக்கரசர்