சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சிலை அமைக்க மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் விண்ணப்பங்களையும் அவர்கள் அளித்தனர்.
அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த அப்போதைய மாவட்ட ஆட்சியர், சிலை அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்திருந்தார். பரிந்துரை மீது தமிழ்நாடு அரசு முடிவெடுக்காததால், தற்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் சங்கம் சார்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த அவர் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால் சிலை வைக்க ஒப்புதளிக்காமல் தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து தீண்டாமை உணர்வுடன் சங்கரலிங்கனார் சிலை வைக்க அனுமதி மறுத்த அரசாணையை ரத்துசெய்யக்கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி. செல்வகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் மதுரையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முத்திராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளையும் அகற்ற உத்தரவிட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க...சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் சாராம்சங்கள்