சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 2499 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதன்பேரில், மாநகராட்சி உதவி/ இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர்கள் கொண்ட குழுவானது சென்னை மாநகராட்சி முழுவதும் அதிரடியான கள ஆய்வினை மேற்கொண்டது. இதன்மூலம் விதிகளை மீறிய 1683 கழிவுநீர் இணைப்புகளை இக்குழுவானது அகற்றியுள்ளது.
மேலும், இந்த இணைப்புகளை பயன்படுத்தி வந்தவர்களுக்கு 10.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், சாதாரண கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு அபராதமாக 5 ஆயிரம் ரூபாயும், வணிக வளாகங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் சிறப்பு கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், சிறப்பு கட்டிடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 1 லட்சம் ரூபாயும், அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் மாநகராட்சி சார்பில் அபராதம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...