கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு `ரெம்டெசிவிர்' என்ற மருந்து பயனளிப்பதாகக் கூறி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை, மருத்துவர்கள் பரிந்துரை செய்துவருகின்றனர்.
மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டை வைத்துக்கொண்டு, ரெம்டெசிவிர் மருந்துக்காக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில், பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:
கடந்த சில நாள்களாக எல்லோரும் ரெம்டெசிவிர் மருந்தைத் தேடி அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காப்பாற்றக் கூடிய மருந்து இல்லை.
இதனை உலக சுகாதார நிறுவனமும், தமிழ்நாடு அரசின் சிகிச்சை வழிகாட்டுதல் முறையிலும் தெளிவாகக் கூறியுள்ளோம். இந்த மருந்தை செலுத்தினால் மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தினை குறைக்கும். மற்றப்படி இந்த ஊசி செலுத்தினால் மட்டும் தான் நீங்கள் கரோனா தொற்றிலிருந்து வெளியில் வர முடியும் என்ற நிலை இல்லை.
அதேசமயம், ரெம்டெசிவிர் மருந்து ஆண்டி வைரல் மருந்தாகும். இதை எடுத்துக் கொள்வதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைப்பெறும் காலம் மட்டுமே குறையும். எனவே, அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு இருப்பு இருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு சில இடங்களில் மருந்து இருப்பு இருக்கிறது. தனியார் மருத்துவமனையாலேயே ரெம்டெசிவிர் மருந்தை அளிக்க முடியதா நிலையில், சாதாரண மனிதர்கள் எப்படி மருந்தை வாங்கி வர முடியும். இதனால், தேவையற்ற பதற்றத்தையும், பற்றாக்குறையையும் உருவாக்கி உள்ளோம்.
அரசு மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பு இருக்கிறது. தேவைப்படுபவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அளித்து வருகிறோம். தேவைப்படும் இடங்களுக்கும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்து அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இருமல் மருந்துகளை கரோனா பாதிப்பிற்கு உபயோகிக்காதீர்!