சென்னை: பெற்றோரை இழந்த அல்லது அவர்களில் ஒருவரை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைப்பீட்டுத்தொகை வழங்கும் திட்டத்தை, இன்று (ஜூன்.16) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு வைப்பு நிதி
- கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 5 பேருக்கும், தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டும் இழந்த 5 குழந்தைகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைப்பீட்டுத்தொகை சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 79 பேர் உள்ளனர். தாய், தந்தையில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் முறையே 2 ஆயிரத்து 650 பேர் உள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
- பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே ஏற்கும்
- கரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய், அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கும்பட்சத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படும்.
- தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, பிரதமரின் நிதியுதவி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, புத்தகங்கள் இந்த நிதியில் இருந்தே வழங்கப்படும்.
- ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
- குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களாகவோ இருக்கும்பட்சத்தில் அரசின் எந்த சலுகையும் கிடைக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு