சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க கடந்த 1993ஆம் ஆண்டு தமிழ்நாடு - கர்நாடகா மாநில அரசுகள் இணைந்து கூட்டு ஒப்பந்தத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, மலை கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டன.
இந்தத் தேடுதல் வேட்டையின் போது, மலைக் கிராம மக்களை பிடித்து சென்று சட்டவிரோதமாக முகாம்களில் சிறை வைத்து, சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. இந்த குழு, அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது.
அதன்படி, இரு மாநில அரசுகளும் தலா 5 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த 10 கோடி ரூபாயில் 2.80 கோடி ரூபாய் இழப்பீடாக, கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகள் ஆகியும் மீதமுள்ள 7.20 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவில்லை.
முழு இழப்பீட்டையும் வழங்க கோரி விடியல் மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழ்நாடு அரசு 4 வாரத்திற்குள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராம்குமார் மரண வழக்கு: உடற்கூராய்வு செய்த மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்