சென்னை : டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகுச் சட்டப்பள்ளியில் ஹானர்ஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிஏ எல்எல்பி ஹானர்ஸ்,பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்ம், பி.காம் எல்எல்பி ஹானர்ஸ், பிசிஏ எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய சட்டப்படிப்புகளை சீர்மிகு சட்டப்பள்ளியில் படிப்பதற்கு ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் பிஏ,பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ் படிப்பில் சேர்வதற்கு 3,357 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.அவர்களில் 53 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 3,304 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் பிகாம் எல்எல்பி ஹானர்ஸ் படிப்பில் சேர 1,340 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில் 87 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1,253 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
பிசிஏ எல்எல்பி ஹானர்ஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த 849 மாணவர்களில் 140 மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 709 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்கள் விபரங்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பிஏ,எல்எல்பி, பிகாம் எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய நான்கு பாடப்பிரிவிலும் என்ஆர்ஐ மாணவர்கள் உட்பட தலா 152 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
மேலும் முதல்முறையாக மிகவும் பிறப்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இலவச வாக்காளர் அடையாள அட்டை - அக்டோபர் 1ஆம் தேதி முதல்!