ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் , தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் பாடத் தேர்வில் இரு தாள்களுக்கு பதிலாக 2019-2020 ம் கல்வி ஆண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாகத் தேர்வு நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறு முதல் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாரம்சங்களை உள்ளடக்கியதாக தேர்வுகள் நடத்திட அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கு புதிய திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ளார். இதற்கு முன் மார்ச் 2020 ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்கான கால அட்டவணை கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி வெளியிடப்பட்டது.
தற்போது வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடங்களை ஒன்றிணைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் எனவும், இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 4 ந் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான புதிய கால அட்டவணை:
27.3.2020- மொழிதாள்
28.3.2020 - விருப்பப்பாடம்
31.3.2020 - ஆங்கிலம்
3.4.2020 - சமூக அறிவியல்
7.4 2020 - அறிவியல்
13.4.2020 - கணக்கு
இவ்வாறு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது.