சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - நர்மதா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டு மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நர்மதாவிற்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகர சமூக நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் எந்த ஒரு மருத்துவர்களும் இல்லாத நிலையில், மருத்துவமனையில் செவிலியர் மட்டுமே இருந்ததாக தெரிய வருகிறது.
இதைத் தொடர்ந்து நர்மதாவிற்கு ரத்தப்போக்கு அதிகமானதை அடுத்து, என்ன சிகிச்சை மேற்கொள்வது என்று தெரியாமல் அங்கிருந்து மருத்துவமனை ஊழியர்கள் திணறி உள்ளனர். மேலும், நர்மதாவை மதியம் 2 மணி வரை மருத்துவர் இல்லாமல் மருத்துவமனை ஊழியர்களே சிகிச்சை அளித்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று அங்கே அமர வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வெகு நேரமாகியும் மருத்துவர் வராததால், நர்மதாவின் கணவர் ஜெயக்குமார் மருத்துவமனை ஊழியர்களிடம் மருத்துவர் எங்கே, என் மனைவிக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மருத்துவர் வந்து கொண்டிருக்கிறார் என்று கூறிய மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து, மருத்துவருக்காக காத்திருந்த ஜெயக்குமாரிடம் அங்கு வந்த காவலர்கள் ஏன் மருத்துவமனையில் தகராறில் ஈடுபடுகின்றீர்கள் என்று கேட்டதற்கு, நடந்த சம்பவத்தை ஜெயக்குமார் கூறியுள்ளார். பின்னர் காவலர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது, நர்மதாவின் மூக்கில் காட்டன் பஞ்சை வைத்து இருந்ததைக் கண்ட ஜெயக்குமார் அதிர்ச்சி அடைந்து, என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய பொழுது, நாங்கள் என்ன செய்ய முடியும் அவர் இறந்து விட்டார் என்று பதிலளித்தாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெயக்குமார், மருத்துவமனையின் அலட்சியத்தாலே தன்னுடைய மனைவியின் மரணித்துள்ளார் எனக் கூறி உடலை வாங்க மறுத்துள்ளார். மேலும், மனைவியின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையின் முன்பு உறவினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மண் சரிந்து குழியில் சிக்கிய 4 புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு - தனிப்படை போலீசாருக்கு பாராட்டு!