பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
பொள்ளாச்சி சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசி வருவதால், 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால மனுவாக பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்துள்ள வழக்கை நிராகரிக்க கோரி கலைஞர் டிவி, சபரீசன், நக்கீரன் கோபால் ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சபரீசன், நக்கீரனுக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வறுமையால் நேர்ந்த சோகம்: குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தீக்குளிப்பு!