சென்னை: கே.கே. நகரில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா. சுப்பிரமணியன், புனர்வாழ்வு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கை மற்றும் கால் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதையும், அவற்றை மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்துவதற்கான சிகிச்சை மையத்தையும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “சென்னை கே.கே நகர் புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையம் 28 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைக்கு பயன்படுத்த 11 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டட செலவு , உபகரணங்கள் என மொத்தம் 39.83 கோடி ரூபாயில் இந்த புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறர். மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகளை வழங்க உள்ளார். கை, கால் போன்ற நவீன செயற்கை அவயங்களும் முதலமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை வசம் இருக்கும். கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் அத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் புதிய பயனாளிகளை அடையாளம் கண்டு புதிய செயற்கை கால், செயற்கை கை தயார் செய்யும் பணி நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான அலுவலகம் இங்கு அமைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான திறந்தவெளி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி பயனாளிகளை நெருங்கும் வகையில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வருமான வரம்பின்றி மாற்றுத்திறனாளிகளை காப்பீட்டு திட்டத்தில் இணைக்கும் பணியை முதலமைச்சர் 28ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையின்றி செயற்கை கை, கால் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க உள்ளார். தொழுநோய், யானைக்கால் உள்ளவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 28ஆம் தேதி முதல்வரால் வழங்க உள்ளார். இங்கு செயற்கை கை, செயற்கை கால் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் தயார் செய்யப்பட உள்ளது.
பெங்களூரில் தயாரிக்கப்படும் அதிநவீன பேட்டரி கால்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கென தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சென்னை ஐஐடி தயாரிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன உபகரணங்களையும் சமூக நலத்துறை மூலம் பெற்று இலவசமாக வழங்கி வருகிறோம்.
மையத்தில் காலியாக உள்ள இடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் செயற்கை கால் மற்றும் கைகளை பொருத்துவதற்கு வரும்பொழுது காத்திருப்பதற்கான காத்திருப்பு கூட சாய்வு தளத்துடன் அமைக்கப்படும். மேலும் இங்குள்ள கட்டிடங்கள் பழுது பார்த்து சீரமைக்கப்படும்” என தெரிவித்தார்.