சென்னை: திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதானம் திட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளல்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரோனா தடுப்பூசி போடுவது ஒரு இயக்கமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், செயல் பாபு என முதலமைச்சர் என்னை கூறியது ஊக்கமளிப்பதாக உள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப் புகழும் முதலமைச்சருக்கே.
இந்து சமய அறநிலையத் துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்தாண்டு மானிய கோரிக்கைக்குள் நிறைவேற்றப்படும். வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவோம்; திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கப்படும் என்றார்.
மேலும் அவர், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும். முதலமைச்சர் விரைவில் சட்ட போராட்டத்தின் மூலம் நீட் தேர்வை ரத்து செய்வார்; தற்கொலை தீர்வல்ல.
இதையும் படிங்க: நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி