சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே கழுத்தறுப்பட்ட நிலையில் ஆண் சடலமொன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த சேலையூர் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக காவல்துறையினர் உயிரிழந்த நபர் குறித்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவர் இரும்புலியூரை சேர்ந்த மஞ்சுநாதன்(33) என்பது தெரிய வந்தது. இவர் கட்டட கான்ட்ராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
உடலருகே கிடந்த சிறிய கத்தி
மஞ்சுநாதன் சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள எட்டு இடங்களில் கட்டட பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கட்டுமான பொருள்கள் விலையேற்றத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என மஞ்சுநாதன் புலம்பி வந்துள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் (அக்.26) வழக்கம் போல் பணிக்கு சென்ற மஞ்சுநாதன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் காணாமல் போனது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்நிலையிலேயே அவர் கழுத்தறுப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலின் அருகே சிறிய கத்தி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெறிச்செயல் - தெறித்து ஓடிய காவலர்கள்