சென்னை: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு 30 மாவட்டங்களில் மறு ஒப்பந்தப்புள்ளி கோருவது மற்றும் ஒப்பந்தம் கால நீட்டிப்பு செய்யப்பட்ட 8 மாவட்டங்களுக்கு புதிய மதுக்கூட ஒப்பந்தம் கோருவது தொடர்பாக மாநில வாணிபக் கழகம், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த கடிதத்தில், "30 மாவட்டங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறுதி செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மதுக்கூடங்கள் மூடப்பட்ட நிலையிலும், பல மதுக்கூடங்கள் இடவசதி இருந்தும் டெண்டர் பெறப்படாத காரணத்தால் செயல்படாத நிலையிலும் உள்ளதாக மாவட்ட மேலாளர்களிடம் இருந்து கடிதங்கள் வருகின்றன.
ஆகவே மூடப்பட்ட மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூட வசதியுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998இன்படி (Tamil Nadu Tender Transparency Act 1998 ) மறு ஒப்பந்தப்புள்ளி (Re-Tender) கோரிட 30 மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு, ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி விவரம் குறித்த படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி கோர வேண்டும்.
இந்த ஒப்பந்தப்புள்ளி மற்றும் மறு ஒப்பந்தப்புள்ளி முடிவடையும் காலம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதமாக இருத்தல் வேண்டும். அதேபோல மதுக்கூட ஒப்பந்தம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள சென்னை (வடக்கு) சென்னை (தெற்கு), சென்னை (மத்தியம்), காஞ்சிபுரம் (வடக்கு) காஞ்சிபுரம் (தெற்கு), திருவள்ளூர் (கிழக்கு), கிருஷ்ணகிரி மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 - ன்படி (Tamil Nadu Tender Transparency Act 1998) புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்திட அறிவுறுத்தபடுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பாராக செயல்பட்ட பேருந்து நிறுத்தம்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்!