சென்னை: புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விற்பனை அரங்குகளை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் - BAPASI ஆண்டுதோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சிகள்தான் பதிப்புத் தொழில் செய்வோர் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான முக்கிய வாய்ப்பாக அமைகிறது. இப்புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிடர் சமூகங்களைச் சேர்ந்த தங்களுக்கு விற்பனை அரங்குகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவதில்லை என்றும், எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்களான பா.அமுதரசன் மற்றும் ஏ.பி. காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் ஆகியோர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், புத்தகக் கண்காட்சிகளில் பப்பாசி சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே குறைந்த விலையில் விற்பனை அரங்குகள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர் அல்லாத பிற பதிப்பகங்களுக்கு அரங்குகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் பப்பாசி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து அரங்கு பெற்றாலும் அதற்கு கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும் என்றும், தாம் நடத்தும் தடாகம்' பதிப்பகம் ஆண்டுதோறும் பப்பாசி தலைமையிலான புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் விற்பனை அரங்கு கொடுப்பதால் தமக்கு தொழில் நெருக்கடி ஏற்படுவதுடன் புத்தக விற்பனை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொழில் செய்வோரின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதையும், அவர்களைத் தொழில் செய்யுமாறு ஊக்குவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதையும் ஆணையம் கவனப்படுத்துகிறது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைப் பற்றிய நூல்களும் படைப்புகளும் ஆண்டுதோறும் வெளியாகின்றன என்றாலும், இச்சமூகங்களைச் சேர்ந்த பதிப்பாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதை ஆணையம் அறிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர்களையும் பழங்குடியினரையும் முன்னேற்றுவதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியம் என்பதால் அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் நூல்களை எழுதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட நிதியுதவியுடன்கூட விருதுகளை - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழக அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்குவதை ஆணையம் வரவேற்றுப் பாராட்டுகிறது. இவ்வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்தோர் நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களாகத் தொழில் செய்வதை ஊடக்குவிப்பதும் அவசியம் என ஆணையம் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு மாதத்திற்கு விவசாயிகளுக்கு டோல் கேட் இலவசம் - பஞ்சாபில் நடப்பது என்ன?