சென்னை: மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த ஹால்மார்க் விதிகளுக்கு நாடு முழுவதிலும் உள்ள நகை வணிகர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இது வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஒருசேர பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் முழுப் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.
நகைகளின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய ஹால்மார்க் எனப்படும் பிஐஎஸ் தரச்சான்றிதழ் பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நடைமுறை கடந்த 16ஆம் தேதி முதல்கட்டமாக நாட்டில் உள்ள சில நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெரும்பாலான நகைகள் ஹால்மார்க் தரச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்யப்பட்டுவந்தாலும் தற்போது அரசு இதனைக் கட்டாயமாக்கியுள்ளது.
கோடிக்கணக்கில் இழப்பு
ஆனால் ஹால்மார்க் சான்றிதழுடன் புதிதாக ஒவ்வொரு குண்டுமணி தங்கத்துக்கும் HUID எனப்படும் தனித்துவமான அடையாள எண் ஒன்றை அச்சிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதுதான் நகை வணிகர்களின் பிரச்சினை எனக் கூறுகிறார் சென்னை நகை வணிகர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சாந்தகுமார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "முன்பெல்லாம் காலையில் கொடுத்து மாலைக்குள் நகைகளுக்குச் சான்றிதழ் பெற்றுவிடலாம். தற்போது ஐந்து நாள்கள் வரை இதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எங்கள் கையில் பணப்புழக்கம் இல்லாமல் போகிறது. தங்க நகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருவேளை சோதனை மையத்தில் திருட்டு, விபத்து போன்றவை ஏற்பட்டால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் இடர் உள்ளது. மேலும், நகைகளை வாடிக்கையாளர்கள் கேட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் நகை வணிகர்களுக்கு ஏற்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் எங்களது கோரிக்கையை முன்வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
யூனிக் ஐடிதான் மிகப்பெரிய பிரச்சினை
புதிய ஹால்மார்க் விதிகளின்படி வாடிக்கையாளர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதிப்படைகிறது என நகை வணிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சுமங்கலி ஜூவல்லர்ஸ் பரத் பேசுகையில், "மத்திய அரசின் இந்த ஹால்மார்க் விதிகள் பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாக உள்ளது. நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் தற்போது இதில் கொண்டுவரப்பட்டுள்ள யூனிக் ஐடிதான் மிகப்பெரிய பிரச்சினை.
இது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. நாட்டில் தரச்சான்று ஆய்வகங்கள் இருக்கும் 250 நகரங்களில் மட்டுமே ஹால்மார்க் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் சிறு நகரங்களுக்குச் செல்லும் சூழல் உள்ளது.
அப்போ 30 இப்போ 100
புதிய விதிகளின்படி ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்வுசெய்ய முடியவில்லை. ஒருவர் வெவ்வேறு செட்டிலிருந்து ஜிமிக்கி-கம்மல் வாங்க ஆசைப்பட்டால் அதனைச் செய்ய முடியாது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு நகை பிடிக்கவில்லை என்றால் அதனைத் திரும்பப் பெற முடியாது. முன்பு ஒரு நகைக்கு ஹால்மார்க் செய்ய 30 ரூபாய் செலவாகிறது என்றால், தற்போது இது 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனை நாங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்துதான் பெற வேண்டியுள்ளது. இப்புதிய ஹால்மார்க் சட்டத்துக்குப் பிறகு எங்களது செலவு கடுமையாக அதிகரித்து, வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த விதிகளை, பெரு நிறுவனங்கள் சமாளித்தாலும், சிறு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறிய கடைகள் போன்றவற்றுக்கு இது மிகப்பெரிய சுமையாக அமைந்துள்ளது என நகை வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஒலிக்க தடை; கோபத்தில் கவிஞர் சுகிர்தராணி